ஆரணி, ஆக.5: ஆரணி நகராட்சியில் சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நாள்தோறும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில்...
ஆரணி, ஆக.5: ஆரணி நகராட்சியில் சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நாள்தோறும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் குப்பைக்கழிவுகளை கொட்டாமல் இருக்க நகராட்சி சார்பில் பேனர் வைத்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆரணி- தச்சூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கடைகளில் இருந்து குப்பைகளை சாலையில் கொட்டி வந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சாலை மற்றும் கால்வாயில் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். அதேபோல், நேற்றும் தச்சூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் குப்பைகளை சாலையில் கொட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் வடிவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், சாலையில் மீண்டும் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். அப்போது, வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன், வருவாய் உதவியாளர் அந்தோணி, துப்புரவு மேற்பார்வையாளர் பிரதாப், குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.