செய்யாறு, அக். 4: செய்யாறு அருகே மாரியநல்லூர் பகுதியில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி செல்லும் 10க்கும் மேற்பட்ட கிரஷர் லாரிகளை பொதுமக்கள் நேற்று மாலை சிறை பிடித்தனர். செய்யாறு அருகே மாரியநல்லூர் கிராமத்தைச் சுற்றி 5 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாரியநல்லூர் வழியாக தினந்தோறும் நூறிலிருந்து 150 கனரக வாகனங்களில் 24 மணி நேரமும் அளவுக்கு அதிகமான எடை கொண்ட பாறைகள், ஜல்லிகற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவைகளை லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் கிராமப்புற சாலை சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாரியநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் வழியாகச் சென்ற எம் சாண்ட் ஏற்றி செல்லும் லாரி சென்ற வேகத்தில் பின்புற கதவுகள் திறந்து ஈரத்தோடு இருந்த எம் சென்ட் சிதறியதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்தது.
மேலும் எம்சாண்ட் கொட்டிக்கொன்றே சென்றதால் சாலையில் பயணிக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்தனர். இதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த 10 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக பாரங்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும். தார்பாய் கொண்டு மூடி எடுத்து செல்ல வேண்டும். கிராம் வழியாக செல்லாமல் மாற்று பாதைகள் அமைத்து எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லாரிகளை விடுவித்தனர்.