வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் 3 நாட்கள் வழங்கப்படுகிறது: கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல்
திருவண்ணாமலை, அக். 4: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கு நாளை (5.10.2025, 06.10.2025 மற்றும் 07.10.2025) முதல் 3 நாட்கள் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தில், தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.