கலசபாக்கம், டிச.2: கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரிய கிளாம்பாடி ஊராட்சி கொல்ல கொட்டை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகள் ஐஸ்வர்யா(14). இவர் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாணவி பள்ளி முடித்தவுடன் பஸ்ஸில் வந்து கோடி குப்பத்திலிருந்து இறங்கினார். அங்கிருந்து தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மாணவி மீது மோதியது. இதில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
+
Advertisement

