தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதியுலா * கபாலம் ஏந்திய கரத்துடன் வலம் வந்தார் * வெள்ளி உண்டியலில் பக்தர்கள் காணிக்கை திருவண்ணாமலை தீபத்திருவிழா
திருவண்ணாமலை, டிச.2: கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ம் நாள் உற்சவமான நேற்று மாலை, கபாலம் ஏந்திய கரத்துடன் தங்க மேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 8ம் நாள் உற்சவத்தில் நடைபெறும் பிச்சாண்டவர் உற்சவம் தனித்துவம் மிக்கது. தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, சிவபெருமான் எடுத்த பிச்சாண்டவர் திருக்கோலத்தில் 8ம் நாள் விழாவில் பவனி வருவது வழக்கம். அப்போது, ைகயில் கபாலம் (மண்டை ஓடு) ஏந்தியபடி, பிச்சாண்டவர் திருக்ேகாலத்தில் சிவபெருமான் வீதியுலா ெசன்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இவ்விழாவின் சிறப்பாகும். அதன்படி, தீபத்திருவிழாவின் 8ம் நாள் உற்சவமான நேற்று மாலை 5 மணியளவில், பிச்சாண்டவர் உற்சவம் எனும் பிச்சை தேவர் விழா விமரிசையாக நடந்தது. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தொடங்கிய பிச்சாண்டவர் உற்சவம், மாட வீதிகள், பெரியகடைத் தெரு, அசலியம்மன் கோயில் தெரு, மண்டித்தெரு மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிச்சாண்டவர் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த உற்சவத்தின் போது கொண்டு செல்லப்பட்ட பிரமாண்டமான வெள்ளி குட உண்டியலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கையை செலுத்தினர். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை தவிர மற்றவர்கள் அழியக்கூடியவர்களே என்ற உண்மையை, பிச்சாண்டவர் கையில் உள்ள மண்டை ஓடு உணர்த்துகிறது. மேலும், கையில் ஏந்திச் செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் ‘நான்’ எனும் அகந்தையை போட்டுவிடுங்கள் என இறைவன் இவ்விழாவின் மூலம் உணர்த்துகிறார். ஆடையில்லா தோற்றத்தில், கபாலம் ஏந்திய கரத்துடன் காட்சிதரும் திருக்கோலமே பிச்சாண்டவர். `நான்' எனும் செருக்கை கைவிட்டு ‘அவன்’ அருளால்தான் புலனடக்கம் உண்டாக வேண்டும் என்பதும், அகந்தை ஏற்பட்டால் அழிவு நிச்சயம் என்பதும் இந்த விழாவின் உட்பொருளாகும். எனவேதான், தீபத்திருவிழாவில் பிச்சாண்டவர் உற்சவத்தில் மட்டுமே செல்வச் செருக்கை நீக்குவதற்காக உண்டியல் கொண்டு செல்வதும் மரபாக அமைந்துள்ளது. மேலும், தீபத்திருவிழா உற்சவத்தில் நடைபெறும் சுவாமி திருவீதியுலா அனைத்தும், மாட வீதியில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். ஆனால், பிச்சாண்டவர் வீதியுலா மட்டும் மாட வீதி மட்டுமின்றி, மண்டித்தெரு உள்ளிட்ட மற்ற வீதிகள் வழியாகவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

