வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலை, நவ. 1: கீழ்பென்னாத்தூர் அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.கீழ்பென்னாத்தூர் தாலுகா கார்ணாம்பூண்டி அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவா(24). இவர், பிளஸ் 2 படித்து வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கடந்த 11.3.2022 அன்று பள்ளிக்குச் சென்ற சிறுமியை வழிமறித்து, கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது, வாலிபர் சிவா கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவாவை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
