Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடியில் 2 பேரை கைது செய்த மேற்கு வங்க போலீஸ் தலைமறைவான பாஜ பிரமுகர் 2 பேருக்கு வலை: வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, ஜூலை 24: ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடி விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பாஜ பிரமுகர் 2 பேரை மேற்கு வங்க போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பாஜக பிரமுகரும், தேசூர் அடுத்த மொலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பாஜக பிரமுகரும் நண்பர்கள். இருவரும் ஆன்லைன் மூலமாக ரூ.1000 ஆயிரம் பணம் செலுத்தினால், ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆன்லைனில் தகவல் பரப்பினர்.

இதை நம்பிய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரூ.1.50 கோடி வரை பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆன்லைனில் பணத்தை ஏமாந்த நபர்கள் மேற்கு வங்க மாநில போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மேற்குவங்க மாநிலம் கல்கத்தா மிதான் நகர் சைபர் கிரைம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் மஜூந்தர் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் படையினர் கடந்த ஒரு வாரமாக வந்தவாசி நகரில் தங்கி, அவர்களை கண்காணித்தனர்.

இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கில் பணம் அனுப்பிய முகவரியை போலீசார் கண்டுபிடித்து அதில் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன்(35), அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மன் மகன் வெங்கடேசன்(40) என தெரியவந்தது.

இதுகுறித்து வந்தவாசி போலீசாரிடம் மேற்கு வங்க போலீசார் கூறியதாவது:

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மகன் வெங்கடேசன் வங்கி கணக்கில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து தலா ரூ.15 லட்சம் வந்துள்ளது. இந்த பணத்தை பாஜ பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பணம் என்றும், இந்த பணம் உனது வங்கி கணக்கிற்கு வரும், அதை எடுத்து கொடுத்தால் ரூ.1 லட்சம் கமிஷன் பணம் வரும் எனவும் கூறி அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்தியது தெரியவந்தது என்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சாமியார் பெயரைக் கொண்டவர் இந்த பாஜ பிரமுகர். இவருடன் தேசூர் அருகே மொலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பாஜ பிரமுகரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளி என தெரியவந்ததால் இவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தேவன், வெங்கடேசன் இருவரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்குவங்க மாநிலத்திற்கு நேற்று கொண்டு சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைன் மூலமாக பாஜக பிரமுகர்கள் பண மோசடி செய்துள்ள சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.