ஆரணி, ஜூலை 30: ஆரணி அருகே நிலத்தகராறில் விவசாயியை சரமாரி தாக்கி கத்தியால் கிழித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி, 2 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(60), அதேபகுதியை சேர்ந்தவர் இவரது உறவினர் முருகன்(50), இவர்கள் இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களிடையே நிலம் சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்பிரமணிக்கும், முருகனுக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த முருகன் அவரது மனைவி ஜானகி(40) மற்றும் மகன்கள் தங்கராஜ்(26), தங்கமணி(24) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் முருகன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுப்பிரமணியை தலையில் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னர் முருகன் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சுப்பிரமணி நேற்று கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, முருகனை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகனின் மனைவி ஜானகி, அவரது மகன்கள் தங்கராஜ், தங்கமணி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.