Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தினசரி எக்ஸ்பிரஸ் நேரடி ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்: மக்களவையில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஜூலை 26: திருவண்ணாமலைக்கு கூடுதலான எண்ணிக்கையில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என எம்பி அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, விதி எண் 377ன் கீழ் திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்ததாவது: கோயில் மாநகரமான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும், கிரிவலம் சென்று வழிபடவும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். எனவே, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தவும், விரைவான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்தவும் வேண்டியது அவசியமாக உள்ளது.

எனவே, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை திருவண்ணாமலையுடன் இணைக்கும் வகையில் தினசரி எக்ஸ்பிரஸ் நேரடி ரயில்களையும், சென்னை திருவண்ணாமலை இடையே வந்தே-பாரத் ரயிலையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் அதிகரிப்பதுடன், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்களுக்கான ரயில் போக்குவரத்து வசதி மேம்படும்.மேலும், ஆன்மிக சுற்றுலாத்தலமான திருவண்ணாமலைக்கு வசதிகளை மேம்படுத்துவதன், ஆன்மிக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வளர்ச்சியடையும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.