Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

₹1.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் டிஆர்ஓ, எம்எல்ஏ வழங்கினர் கம்மவான்பேட்டையில் மனுநீதிநாள் முகாம்

கண்ணமங்கலம், ஜூலை 11: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை அரசினர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் முரளிதரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கவிதா முருகன் வரவேற்றார். டிஆர்ஓ மாலதி, ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து, மரக்கன்று நட்டனர். பின்னர் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் பயனாளிகளுக்கு ₹1.50 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

அப்போது, பொதுமக்கள் வசிக்கும் இடத்தை தேடி ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் வந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது தீர்வு காண்பதே மனுநீதி நாள் முகாம்கள். இன்றைய தினம் வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட கம்மவான்பேட்டை ஊராட்சியில் நடைபெறும் இந்த மனுநீதி நாள் முகாம் தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட 195 மனுக்களில் 137 மனுக்கள் ஏற்கப்பட்டு ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கப்படுகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 15 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று முகாம் நடத்தப்பட்டு அத்துறைகளின் கீழ் 44 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 11ம் தேதி (இன்று) தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளை தீர்வு காணும் சிறப்பு திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ வேலூர் வட்டத்தில் வரும் 18ம் தேதி அன்று நடத்தப்படவுள்ளது. இன்று(நேற்று) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் கம்மவான்பேட்டை தனி வருவாய் கிராமமாக ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். முகாமில் அரசியல் பிரமுகர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.