செங்கம், ஜூலை 24: செங்கம் அருகே சிறுமி உட்பட 5 பேரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுப்பாளையம் அடுத்த முன்னூர் மங்கலம் கிராமத்தில் நேற்று பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அம்சவள்ளி முருகன் தம்பதி. இவர்களது மகள் ரக்சிதா(2) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தெரு நாய் சிறுமியை துரத்தி சென்று வலது முக தாடை, வலது கையை கடித்தது.
இதேபோல் அதேபகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரோஷினி(37), காளி(55), சக்கரை(60), தண்டபாணி(25) ஆகியவரை கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று ஒரே நேரத்தில் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட 5 நபர்களும் செங்கம் அரசு மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரேநேரத்தில் 5 பேரை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.