அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்துக்கு 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி (காட்டன் துணி), 25 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டது. மகாதீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். அதன்படி, வரும் 13ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். அதையொட்டி, தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலைமீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, சிறப்பு பூஜைகளுடன் தினமும் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். எனவே, திருவண்ணாமலைக்கு 11 நாட்களும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
+
Advertisement

