திருவண்ணாமலை, செப்.3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில், ரூ.6.18 கோடியை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிவரை நடந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், உண்டியல் எண்ணும் பணி முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூடியூப்) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்நிலையில், கோயில் உண்டியலில் ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.
பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் வரலாற்றில், உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்து இருப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.