Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராட்சத பள்ளத்தில் லாரி, பைக் சிக்கியது

அம்பத்தூர், ஆக. 18: கொரட்டூர் பால்பண்ணை அருகே ராட்சத பள்ளத்தில் விழுந்து லாரி, பைக் சிக்கி கொண்டது. பின்னர் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. கொரட்டூர் பால்பண்ணை அருகே கருக்கு சாலை உள்ளது. கொரட்டூர், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஸ்கிராப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டியை நோக்கி சூசைராஜ் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது கருக்கு பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென 15 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் என்ற அளவுக்கு பள்ளம் ஏற்பட்டு லாரியின் பின்பக்க சக்கரம் அதில் சிக்கி தொங்கியது.  இந்நிலையில் லாரியை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சரவணனை மீட்டனர்.

அவர் லேசான காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்பு வழி அமைத்தனர். மேலும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை கிரேன் மூலம்மீட்டனர். மண் அரிப்பால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.