திருவள்ளூர்: திருவள்ளூர் நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் மன்றக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் சிமென்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் அமைத்து தந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பேசினர். மேலும் தங்களது பகுதிகளில் மீதம் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் வைத்தனர்.
கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும்போது, நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.