புழல்: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், உள்ளூர் உட்புறச் சாலைகள் வழியாக பல்வேறு கிராமங்களுக்குச் செல்வதற்கான வழிகளில், அந்தந்த கிராமத்தின் பெயர் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால், வாகனங்களில் செல்வோர் வழி தெரியாமல் நீண்ட தூரம் நெடுஞ்சாலை வழியாக சென்று, திரும்பி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
கிராம பகுதிகளுக்குச் செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்லாயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறை, சில ஆயிரம் செலவில் கிராம பகுதிகளுக்கு செல்வதற்கான அறிவிப்பு பலகை வைக்க ஏன் அலட்சியம் காட்டுகிறார்கள் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதில், செங்குன்றம் அடுத்த காரனோடை பாலம் உட்புற சாலை பகுதியான ஜனப்பன்சத்திரம், பெரியபாளையம் வழிப்பலகை இல்லை.
அதேபோன்று, தச்சூர் கூட்ரோடு பாலம் தொடக்கத்தில் பொன்னேரி செல்வதற்கான பெயர் பலகை இல்லை. தொடர்ந்து, கவரப்பேட்டை பாலத்தில் உட்புறசாலைக்கான பெயர் பலகை இல்லாமல், பாலத்தின் மீது சென்று மீண்டும் கவரப்பேட்டைக்கு வருவதற்கான நிலை உள்ளது. இதேபோன்ற நிலைதான் சென்னை - கொல்கத்தா சாலை முழுவதும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை உட்புற சாலைகளுக்கு பெயர் பலகை இல்லாமல், பல ஊர்களில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய கிராமங்களுக்குச் செல்வதற்கான வழி தெரியாமல், பாலத்தின் மீது சென்று மீண்டும் திரும்பி வருகின்ற நிலை உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை உட்புற சாலைகள் பிரிகின்ற பகுதியில் கிராமத்தின் பெயர் எழுதிய, பெயர் பலகைகளை மிகப் பெரியதாக வைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.