பள்ளிப்பட்டு, ஆக. 11: ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் பள்ளிப்பட்டு - ஆர்.கே.பேட்டை வட்டக் கிளை சார்பில் முப்பெரும் விழா அத்திமாஞ்சேரிபேட்டையில் நடைபெற்றது. வட்டார தலைவர் சின்னப்பன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வாசுதேவராஜூ முன்னிலை வகித்தார். வட்டார துணை தலைவர் தியாகராஜன் வரவேற்றார். பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சிவ.திருமேனிநாதன், மாநில பொதுச்செயலாளர் மோகன், மாநில பொருளாளர் மாதவன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், 70 மற்றும் 80 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்கள், புதிய பொறுப்பாளர்கள் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து, வருடாந்திர பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க வேண்டும், மருத்துவ படி மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, வட்டார செயலாளர் சொக்கலிங்கம் ஆண்டறிக்கை வாசிக்க, வட்டார பொருளாளர் ஓ.சி.மணி வரவு செலவு கணக்கு வாசித்தார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார்த்தசாரதி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டார இணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.