Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுருட்டப்பள்ளி, சிட்ரபாக்கம் தடுப்பணைகள் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை, செப்.3: ஊத்துக்கோட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், சுருட்டப்பள்ளி, சிட்ரபாக்கம் தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த, ஏரியில் மழை காலங்களில் மழைநீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. நாளடைவில் இந்த தடுப்பணை மழையால் சேதமடைந்ததால், அதனை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர், கடந்த 2014-2015ம் ஆண்டு ₹3.42 கோடி செலவில் சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணையையும், கரைகளையும், பொதுப்பணித்துறையினர் புதுப்பித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டையிலும், ஆந்திர மாநிலத்திலுள்ள நாகலாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வந்த மழைநீர், சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து, பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சிட்ரபாக்கம் தடுப்பணைக்கு வந்து நிரம்பியது. இதனால், விவசாயத்திற்கு ஊத்துக்கோட்டை, அனந்தேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என தெரிகிறது. மேலும் ஊத்துக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வருடம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த சிட்ரபாக்கம் தடுப்பனை தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.