Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்புகள் அரவை செய்ய இலக்கு: அக்டோபரில் பணி தொடங்குகிறது

திருத்தணி, ஜூலை 11: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் கரும்பு அரவை 2 லட்சம் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதத்தில் அரவை தொடங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 7 கோட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆலை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆலையில் செயல்பட்டு வரும் தானியங்கி எடைமேடை, கரும்பு இறக்குவதற்கான சுழற்மேடை, மின் ஹவுஸ், கொதிகலான், கரும்பு சக்கைத் தளம், மற்றும் சர்க்கரை உற்பத்தி பிரிவில் இயங்கி வரும் இயந்திரங்களின் பராமரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஆலையில் உள்ள கரும்பு பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உயர் விளைச்சல் மற்றும் புதிய கரும்பு ரகங்களின் நாற்றங்கால் வயல்களை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் மண்புழு தொழு உர மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமான மன்புழு உரத்தினை வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, 2025-26ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7,182 ஏக்கர் கரும்பு விவசாயிகள் முன் பதிவு செய்துள்ளனர். இதுவரை கரும்பு பதிவு செய்யாத விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு அரவை அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார் என்று கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் ஆய்வின் போது கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் ஆட்சியர் மீனா அருள் மற்றும் ஆலையின் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆந்திராவுக்கு செல்வதை தடுக்க வேண்டும்

திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கரும்பு அதிகளவில் ஆந்திராவில் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுவதால், ஆண்டுதோறும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை இலக்கை எட்டுவது கடினமாக உள்ளது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் உள்ள ஆலையில் முன்னதாகவே கரும்பு அரவை தொடங்கப்படுவதாலும், ஏஜெண்டுகள் மூலம் கரும்பு வெட்டி தனியார் ஆலைகளுக்கு கடத்தப்படும் சம்பவங்களாலும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வரத்து குறைந்து விடுகிறது. எனவே எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தி தனியார் ஆலைகளுக்கு கரும்பு கடத்தப்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.