திருப்பூர், நவ.18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் அளித்த மனுவில், உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் அணைக்கு நீராதாரமாக உள்ளது. இதன் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு பாதுகாவலர் இல்லாததால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே சிசிடிவி மற்றும் பாதுகாவலரை நியமிக்க வேண்டும். அணையின் தென்புறத்தில் சின்னம்மநாயக்கன்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றார்.
மினி பஸ்: நொச்சிபாளையம் கோரைமடை தோட்டம் பகுதியைச் சேர்ந்த துரை தண்டபாணி மற்றும் கிராம மக்கள் சார்பாக அளித்த மனுவில், மினி பஸ் விஜயாபுரம், காளிபாளையம், பெருந்தொழுவு, நொச்சிபாளையம், ராமே கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், புதுப்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுவதில்லை இந்த பகுதிகளில் சுமார் 100 குடும்பங்களும், அருகில் இருக்கும் ஹவுசிங் யூனிட்டில் 150 தொழிலாளர் குடும்பங்கள் உள்ள நிலையில் 2 கி.மீ. நடந்து சென்று பேருந்து ஏற வேண்டியுள்ளது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுத்து மினி பஸ் அதற்கு வழங்கப்பட்டுள்ள வழித்தடத்தில் இயக்கி பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் பயன்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீரோடை ஆக்கிரமிப்பு: பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் , பல்லடம் நகரம் நாரணாபுரம் கிராமம் பகுதியில் உள்ள நீரோடையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புல எண் 590ல் வருவாய்த்துறை ஆவணத்தில் நீரோடை என்று பதிவு செய்து நீரோடைகளை பாதுகாக்க வேண்டும் என தண்ணீருடன் வந்து மனு அளித்தனர். மதுக்கடை: திருப்பூர் மேட்டுப்பாறை சிவபிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அளித்த மனுவில், மேட்டுப்பாறை கிராமத்தில் தனியார் நிலத்தில் மதுபான கடை உள்ளது. இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த கடையை அகற்ற வேண்டுமம் என்றனர்.
மாநகராட்சி 18-வது வார்டு தவெக நிர்வாகிகள் அளித்த மனுவில் 18வது வார்டு பவானி நகர் பாப்பநாயக்கன்பாளையம் முதல் கஞ்சம்பாளையம் பகுதி வரையிலான சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் கழிவு நீர் கால்வாய்களில் கலந்து சாலையின் நடுவே தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் மங்கyம் கிராமத்தில் பிஏபி வாய்க்காலுக்காக 1980,1985 ஆம் ஆண்டு நிலம் எடுக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. பிஏபி அலுவலகத்தில் முறையிட்டால் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தான் நில எடுப்பு விவரங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 343 மனுக்கள்:கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கைகள் தொடர்பாக 343 மனுக்கள் அளித்துள்ளனர்.


