உடுமலை, நவ. 28: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு உடுமலையில் நேற்று நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் ஆகும். வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றை குறித்த கல்வியே வாக்காளரியல் கல்வியாகும். இவைகளில் ஊழல் ஏற்படும்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன ஜனநாயகத்தின் எதிரிகள் ஆகும். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வாக்காளரியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வது அவசியமானதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள் என்பது வாக்காளரியலின் மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே இதன் வேலையாகும். வாக்காளர் விழிப்புணர்வு ஊழலை ஒழிக்க அவசியமான ஒன்றாகும். நல்லாட்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். இவ்வாறு ராமராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள், உடுமலை பார் அசோசியேசன் தலைவர் முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.

