காங்கயம்,நவ.26: காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 8 ஆடுகள் படுகாயம் அடைந்தன. காங்கயம், பாப்பினி பஞ்சாயத்துக்குட்பட்ட வரதப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (60). இவர் விவசாயத்துடன் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் 30 செம்மறி ஆடுகளை வழக்கம்போல் இரவு பட்டிக்குள் அடைத்து விட்டு, தூங்க சென்றுள்ளார்.அப்போது பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கொலை வெறியுடன் கடித்து குதறியது.இதில் 3 பெரிய செம்மறி ஆடுகள், 2 குட்டிகள் இறந்தன.
மீதமுள்ள ஆடுகள் பட்டியில் இருந்து வெளியே சிதறி ஓடியது. அதனை துரத்தி துரத்தி கடித்ததில் 8 ஆடுகள் படுகாயமடைந்தன.அதில் 2 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து வருவாய்த் துறையினர், காங்கயம் போலீசார் கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இதுபோல் தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


