திருப்பூர்,டிச. 11: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். தமிழ்நாடு அரசு சாலை மேம்பாட்டிற்காக பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலைகளை மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் முதல் திம்மநாயக்கன்பாளையம் வரை 5.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்க அரசு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூலிபாளையம் நால் ரோடு முதல் ரோட்டின் இரு புறமும் உள்ள கடைகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கூரைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை அப்புறப்படுத்தக்கோரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் முறையாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், ரோட்டோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் பொக்லைன்
இயந்திரங்களை கொண்டு ரோட்டோர ஆக்கிமிப்புகளை அகற்றினர். இதில், நெடுஞ்சாலைதுறை உதவிக்கோட்ட பொறியாளர் கவிதா, திருப்பூர், ஊத்துக்குளி உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், வனஜா, ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி உள்ளிட்ட 30 மேற்பட்ட போலீசார் ஆக்கிமிரப்பு அகற்றும் பணியின் போது உடனிருந்தனர்.


