Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மோடி- டிரம்ப் இணைந்து நடத்திய பொருளாதார பயங்கரவாதம்

திருப்பூர், செப்.3: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மோடி- டிரம்ப் ஆகியோர் இணைந்து இந்தியா மீது நடத்திய பொருளாதார பயங்கரவாத தாக்குதல் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் நேற்று திருப்பூரில் முழங்கினர். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்தம்பித்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிய ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், உடனடியாக நிவாரணம் வழங்க கோரியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் துணை பொது செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பாஜ அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது: வரியை போட சொன்னதே மோடிதான். இது தேசத்தின் மீது விதிக்கப்படும் போர். மோடியின் தேசபக்தி கேவலமானது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளவரை உங்களை திருத்தியே தீருவோம். என்றார்.

தபெதிக ராமகிருட்டிணன் பேசுகையில்,‘ மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கை தவறான அரசியல் காரணமாக ஒட்டுமொத்த திருப்பூர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்ணன் பேசுகையில், ‘ டிரம்பும் , மோடியும் கூட்டு சேர்ந்து போட்டது தான் 50% வரி விதிப்பு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றார்.

ஆதித்தமிழர் பேரவை அதியமான் பேசுகையில், ‘மதம் சார்ந்த அரசியலை மட்டும் மேற்கொண்டு வருகின்றார் மோடி. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிற அரசுதான் ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிறது. அதனை எதிர்க்க வேண்டும் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றனார் பேசுகையில், திருப்பூரில் 3 லட்சம் பேர் வேலை இழக்க கூடிய அபாயம் உள்ளது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு ஒன்றிய ஆட்சியை மக்கள் கொந்தளிப்பின் மூலம் தூக்கி எறிவார்கள் என பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பேசிய அபுபக்கர் பேசுகையில், தொழிலாளர் வர்க்கத்திற்காக எல்லா காலங்களிலும் இந்தக் கூட்டணி துணை நிற்கும். மோடி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார். மக்கள் நீதி மையம் துணைத் தலைவர் தங்கவேல் பேசுகையில், இவ்வாறு பிரச்சனை வரும் என முதல்வர் அறிவுறுத்தியும் ஒன்றிய அரசு முன்னெடுக்கவில்லை. திருப்பூரில் பல மாவட்ட மாநில மக்கள் பிழைத்து வருகின்றனர். ஒன்றிய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித நேய ஜனநாயக தமிமுன் அன்சாரி பேசுகையில், ‘ இந்தியா கூட்டணி தான் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறது. பருத்தி இறக்குமதி செய்ய 11 சதவீத வரி நீக்கம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது அதை ஆண்டு முழுவதும் செய்யவேண்டும். என பேசினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், திருப்பூரை முடக்கும் அமெரிக்க வரி விதிப்பு 30 சதவீத மக்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு ஓங்கி எழும் குரல் மோடி, டிரம்ப் சதி திட்டங்களை தூள் தூளாக்குவோம் என பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி சுப்பராயன் பேசுகையில், இது பொருளாதார பயங்கரவாதம். இவை வளரும் நாடுகளை குறிவைத்து தாக்குகிறது. மோடி பித்தலாட்டத்தின் அடையாள சின்னம். காலத்தால் தூக்கி எறியப்படுவார். என்றார்.