அவிநாசி, செப். 2: அவிநாசி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக இயங்கப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி நகரம், கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் பெரும்பாலான தனியார், அரசு பஸ்கள் அவிநாசி நகருக்குள் வந்து செல்வதில்லை.
ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே தொடர்ந்து இயக்குவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக செல்லும் தனியார் பஸ்சில், அவிநாசியை சேர்ந்த பயணி ஒருவர், அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் இறங்குவதாக கூறி பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர், புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் செல்லாது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீதுதான் பஸ் செல்லும் என்றும் கூறி சிறிது தூரம் பஸ் புறப்பட்டு வந்ததும், பாதியிலேயே இறக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து, அவ்வப்போது பொதுமக்கள், சமூக அமைப்பினர் பிரச்சனைக்குரிய பஸ்களை சிறைபிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஒருசில தனியார் மற்றும் அரசு பஸ்களின் கண்டக்டர், டிரைவர்கள் பயணிகளை அலட்சியப்படுத்தி, ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே தொடர்ந்து இயக்கி வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் அவிநாசிக்கு செல்லும் பயணிகளை பஸ்சில் ஏறவிடாமல் தடுக்கின்றனர். இதனால், காந்திபுரம் பஸ் நிலையத்திலேயே அவர்கள் வெகுநேரம் காத்திருக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பஸ்களில் அவிநாசி பயணிகளை ஏற்றுவதில்லை. இதேபோல ஈரோடு பஸ்நிலையத்திலும், இரவு நேரங்களில் பெரும்பாலான பஸ்களில் அவிநாசிக்கு வருகின்ற பயணிகளை, பஸ்சில் ஏற்றுவதில்லை.
கோவைக்கு மட்டுமே ஏற்றுவதாக புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் பஸ்நிலையத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது.எனவே, இப்பிரச்சனைக்கு போக்குவரத்து காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.