திருப்பூர்,செப்.26: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் தனியார் பனியன் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம் 23வது வார்டு அவிநாசி மெயின் ரோடு, எஸ்ஏபி சிக்னல் அருகில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பேக்கரி அனுமதி இன்றி சாலையோரத்தில் குப்பைகளை கொட்டியது கண்டறியப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.