திருப்பூர், அக்.24: திருப்பூர் மாவட்ட ஐஎன்டியூசி தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங் மற்றும் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூரில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். நல வாரியத்தில் தெளிவுரை தேவை என அனைத்து கேட்பு மனுக்களையும் திருப்பி அனுப்பி நல வாரிய பணிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை தமிழக அரசு கவனிக்க வேண்டும்.
பல்வேறு நல வாரியங்கள் இயங்குவதை மாற்றி கட்டுமானம், ஆட்டோ, உடலுழைப்பு நல வாரியம் ஆகிய நலவாரியங்களாக மாற்றிட வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டிய நேரத்தில் வயதிற்கான சரியான ஆவணம் சமர்ப்பிக்கவில்லை என காரணங்கள் கூறி வயதான தொழிலாளர்களை அலைக்கழிப்பதை தவிர்த்து உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், பொருளாளர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


