திருப்பூர், நவ. 21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி விட்டு சீக்கிரம் திருப்பித் தருமாறு அவசரப்படுத்துகிறார்கள். டிசம்பர் 4 வரை அவகாசம் இருக்கும் போது ஏன் இப்படி அவசரப்படுத்துகிறார்கள் என தெரியவில்லை.
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் உரிய விளக்கங்கள் சொல்வதில்லை. பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் தப்பும் தவறுமாக பூர்த்தி செய்யப்படுகிறது. 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பல்வேறு நபர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத அவகாசம் என்பது மிகவும் குறுகியது. எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.


