உடுமலை, நவ. 19: குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் உப்பாறு கிளை ஓடை செல்கிறது. கொங்கல் நகரத்தில் இருந்து நெகமம் செல்லும் சாலையில் ராமச்சந்திராபுரத்தில் இந்த ஓடை குறுக்கிடுகிறது. இதனால் இந்த சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, தடுப்புச்சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் நிலைதடுமாறி ஓடையில் விழும் ஆபத்து உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி ஓடையில் விழுந்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஓடையில் புதர்மண்டி காணப்படுகிறது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த பாலத்தில் அவ்வப்போது சுண்ணாம்பு பூசி வெள்ளை அடிக்கப்படுகிறது. ஆனால் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. எனவே, உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை வெட்டி அகற்றி தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


