திருப்பூர், செப்.18: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க மகாசபை கூட்டம் ஹார்வி ரோடு பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபை கூட்டத்தில் பொதுச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் 2024-25ம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து 2025 முதல் 2028ம் ஆண்டுகளுக்கான சைமா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தி விலையை ஒரே சீராக வைத்திருக்க வேண்டும்.
பின்னலாடை தொழிலுக்கு தனி வாரியம் திருப்பூரில் அமைக்க வேண்டும், திருப்பூர் நெருக்கடியை குறைக்க மாவட்ட எல்லைகளில் தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தொழில் திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மகாசபை கூட்டத்தில் துணைத் தலைவர் பாலச்சந்தர், பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.