திருப்பூர், ஆக. 15: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளியில் செயல்பட்டு வரும் மகிழ்ச்சி கருணை இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் தங்கி உள்ளனர். இவர்களின் அன்றாட உணவு, உடை, பாதுகாப்பான இருப்பிடம் போன்றவற்றை செவிலியர்களை நியமித்து வழங்கி பராமரித்து வருகின்றனர்.
ஆதரவற்ற முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது மட்டுமல்லாது, முதியவர்களை மகிழ்விக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடச்செய்யவும் மாதந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவைக்கான அக்னிச் சிறகுகள் விருது மகிழ்ச்சி கருணை இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகிழ்ச்சி கருணை இல்லத்தின் நிறுவனர் விஜயகுமார் மற்றும் மாலதி விஜயகுமார் ஆகியோரிடம் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதினை வழங்கினர்.