திருப்பூர், நவ. 12: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் குண்டு வெடித்ததில் 9க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். மேலும், வாகனங்கள் எங்கிருந்து வந்தது, அதன் ஓட்டுநர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
