உடுமலை, செப். 11: உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூருக்கு தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 19 கிராமங்கள் உள்ளன. குடிமங்கலம், பெரியபட்டி, ஜல்லிப்பட்டி உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமங்களும் உள்ளன.ஆனால், உடுமலையில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்துகள் வழியில் உள்ள கிராமங்களில் நிற்பதில்லை. உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பேருந்தில் பயணிகள் ஏற முயன்றால் நடத்துநர் ஏறக்கூடாது என கூறி தடுக்கிறார்.
நேற்று இதேபோல், தனியார் பேருந்து நடத்துநர் தடுத்ததால் பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “பெரிய கிராமங்களில் கூட பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். நகர பேருந்துகள் இல்லாத நேரத்தில்தான் புறநகர் பேருந்துகளில் ஏறுகிறோம். அந்த வழியாக செல்லும் பேருந்தில் ஏற்ற மறுப்பது என்ன நியாயம்? அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.