உடுமலை, நவ. 6: உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு அருவியில் குளித்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு பாலம் சரிந்து விழுந்தது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கோயில் நிர்வாகம் சார்பில் இரும்பு பாலத்தை சீர் செய்யும் பணி முழுவீச்சில் நடந்தது. நேற்று முன்தினம் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.15 நாட்களுக்கு பிறகு அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகளும், உள்ளுர் வாசிகளும் ஆர்வத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
