காங்கயம்., நவ.5: காங்கயம் பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலையில் இருபுறமும் வணிக கடைகள் இயங்கி வருகின்றன. இச்சாலை பெரும்பாலும் வாகன நெரிசலாக காணப்படும். பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலையில் சேதங்கள் ஏற்பட்டு சிறு சிறு பள்ளங்களாக இருந்தது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பள்ளங்களை ஜல்லி கற்களை கொண்டு மூடினர்.
ஆனால் இருசக்கர வாகனங்கள் இப்பகுதியை கடக்கும் போது ஜல்லிகற்களில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். முறையாக சீரமைக்கப்படாத சாலையினால் அடிக்கடி சிறு சிறு வாகன விபத்துகள் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
