திருப்பூர், நவ.5: திருப்பூர் கொங்குநகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியது தொடர்பாக மங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன்(33) என்பவரை கடந்த 2023ம் ஆண்டு திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2ம் எண் நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமீனில் வந்த சதாம் உசேன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதாம் உசேனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சதாம் உசேனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட வடக்கு குற்றப்பிரிவு போலீசாரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
