அவிநாசி, நவ.1: அவிநாசி அருகே பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவில்பாளையத்தில் இருந்து அவிநாசி வழியாக ஈரோடு சென்று லோடு இறக்கி விட்டு மீண்டும் கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லோடு இல்லாமல் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாநல்லூர் அருகே உள்ள கருக்கன்காட்டுபுதூர் மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
தொடர்ந்து வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது சுதாரித்து கொண்ட டிரைவர் கிருஷ்ணன் (35) உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கி தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை தண்ணீர் பீச்சி அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
