தாராபுரம், ஜூலை 31: தாராபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரசு சான்றிதழ்களை வழங்கினார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8, 9, 10, ஆகிய மூன்று வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா தலைமையில், நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு, பொதுமக்கள் அளித்த பல்வேறு துறை சார்ந்த விண்ணப்பங்களையும் அதற்கான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டார்.
முகாமில் பிறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மின்இணைப்பு பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு அதற்குரிய சான்றிதழ்களை உடனுக்குடன் துறை சார்ந்த அலுவலர்களின் நடவடிக்கையின் கீழ் பெற்று பயனாளிகளுக்கு உடனே வழங்கினார். முகாமில் வார்டு கவுன்சிலர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.