திருப்பூர், ஜூலை 30: இஎஸ்ஐ சார்பில் நாடு முழுவதும் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் ஈஎஸ்ஐ SPREE 2025 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் இத்திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதனை தொழில்துறையினர் மத்தியில் கொண்டு சென்று இதன் சிறப்பு அம்சங்களை அவர்களிடத்தில் விளக்கி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை இஎஸ்ஐ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்றைய தினம் சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்த கருத்தரங்கில் இ எஸ் ஐ கோவை துணை இயக்குனர் எம்.கார்த்திகேயன் , மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாசன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டு இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து தெரியப்படுத்த உள்ளனர்.