திருப்பூர், ஆக. 1: திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இருக்கைகள் பற்றாக்குறை இருப்பதை தொடர்ந்து அப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களின் பங்களிப்பாக 45 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் வகுப்பு வகுப்பாசிரியர் சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்களின் பங்களிப்பாக 15 ஆயிரம் ரூபாய் என 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இருக்கையில் வாங்கப்பட்டது.
இதனை பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக நேற்று குழந்தைகளின் பெற்றோர் வழங்கினர். இந்நிகழ்வில் வடக்கு வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், தலைமைஆசிரியர் ஜோசப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.