திருப்பூர், நவ.26: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக சேலத்தில் சப் ஜூனியர் சிறுவர்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தேர்வில் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 7 மிக இளையோர் சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தருண் தமிழக சப் ஜூனியர் சிறுவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை தொடங்கி 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் 35வது சப் ஜூனியர் சிறுவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர் தருண் கலந்து கொள்ள உள்ளார். தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் தருணை திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன், தலைவர் மனோகர், மாவட்ட செயலாளரும் மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கேஎஸ்சி பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தங்கமனோகரி தேவி உள்ளிட்டோரும் பாராட்டி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.


