பல்லடம், ஆக. 2: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் நல்லகாளிபாளையத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் அவசரகால தடுப்பு கதவை மீண்டும் நிறுவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் இருந்து நல்லகாளிபாளையம் வழியாக ஆண்டிபாளையம் செல்லும் பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் நல்லகாளிபாளையம் கிராமத்தில் ஓடை குளக்கரை பகுதியில் ஏற்கனவே ஒரு அவசர கால தடுப்பு கதவு (ஷட்டர்) இருந்தது. வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வரும்போது உடைப்பு ஏற்பட்டால் இந்த கதவை திறந்து உபரி தண்ணீரை ஓடைக்கு விட்டு பழுதை சரி செய்ய ஏதுவாக இது நிறுவப்பட்டு இருந்தது.
தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டலத்திற்கு பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டு விரைவில் பொங்கலூர் பகுதிக்கு தண்ணீர் வந்தடையும் நிலையில் அவசர கால தடுப்பு கதவை அகற்றிவிட்டு கான்கிரீட் மூலம் சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகம் வந்தால் வேறு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. மீண்டும் அப்பகுதியில் அவசரகால தடுப்பு கதவை நிறுவ வேண்டும் என்று பொங்கலூர் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நல்லகாளிபாளையம் விவசாயி திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார்.