திருப்பூர், ஆக. 3: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் வட மாநிலங்களில் ரக்சா பந்தன் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் விழாவின்போது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலம் பெற்று வாழ சிறப்பு பிரார்த்தனை நடத்தி, அவர்கள் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டிக்கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ரக்சா பந்தன் விழா, வருகிற 9ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் வசிக்கின்றனர். திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் இங்கேயே ரக்சா பந்தன் விழாவை கொண்டாடுவதற்காக ராக்கி கயிறுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு உள்ளது. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் ராக்கி கயிறுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு உள்ளது. சுமார் ரூ.20 முதல் ரூ.450 வரையிலான ராக்கி கயிறுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விற்பனையாளர் கூறுகையில், ரக்சா பந்தன் விழா 9ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே பொதுமக்கள் ராக்கி கயிறுகளை தேர்ந்தெடுத்து வாங்கிச்செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கயிறு மட்டுமே விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது பல்வேறு வடிவங்களில் அவை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கயிரோடு சேர்த்து முத்திரை, ராமர், கிருஷ்ணர் உள்ளிட்டோரின் சிறிய அளவிலான புகைப்படங்களுடன் கூடிய ராக்கி கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது திருப்பூரைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்தோடு வாங்கி செல்வது வழக்கம். தற்போது விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.