திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் மங்களம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய வகையிலான தரைப்பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்த தரைப்பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன. தரை பாலத்தின் 2 பக்கங்களிலும் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அவை சேதம் அடைந்து தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய நிலையில் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் நிலை தடுமாறி நொய்யல் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து அப்பகுதிகளில் தடுப்புச்சுவர் அல்லது தடுப்பு கற்கள் அமைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தரைப்பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. அதுபோன்ற சமயங்களில் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலையில் தரைப் பாலத்திற்கு அருகாமையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலக் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.