காங்கயம், ஜூலை 28: காங்கயம் பஸ் நிலையத்திற்குள் கனரக வாகனங்கள் வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அச்சத்தில் உள்ளனர். காங்கயம் பஸ் நிலையம் காங்கேயம் நகர் பகுதியில் மிகமுக்கியமான இடமாக திகழ்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் தாராபுரம், கோவை, கரூர், திருச்சி, திருப்பூர், ஈரோடு, பழனி, சென்னிமலை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல காங்கேயம் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பயணிகளும், பண்டிகை காலங்களில் கூடுதல் அளவில் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய நகரமாகும்.
தினமும் உள்ளூர், வெளியூர் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இடமாகவும், காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் வந்து செல்லும் இடமாகவும் உள்ள நிலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பஸ் நிலையத்தினுள் புகுந்து செல்லுகின்றன. இதனால், பயணிகளை ஏற்றுவதற்காக வரும் பஸ்கள் செல்வதற்கு வழி இல்லாமல் வெகு நேரம் நுழைவாயிலில் காத்திருந்து உள்ளே வருகின்றன.
இதனால், பஸ் நிலையத்திற்குள் வரும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், அடிக்கடி பயணிகளை இடையூறு செய்யும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், பஸ் நிலையத்திற்குள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்குள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.