பல்லடம், ஜூலை 24: தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தென்னை ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், தென்னை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்குநாள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருகிறது.இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும் வகையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தென்னை ஊட்டச்சத்து டானிக் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக்கை மானிய விலையில் வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.