அவிநாசி, ஜன.11: திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன சங்கத்தின் நிறுவனத்தலைவர் சரவணன் ஏற்பாட்டில் கன்ஸ்மர் அபாரன்ஸ் விங் தலைவர் ராமகிருஷ்ணன், தலைமையில் நேற்று சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் திருப்பூர், அவினாசி, காங்கேயம், பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, பெருமாநல்லுர், சேவூர், குன்னத்தூர், ஈரோடு, சேலம், மேட்டூர், எடப்பாடி உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சேலை, பொங்கல் அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஈரோடு ஓவியர் வள்ளி நாராயணன், நல்லூர் நுகர்வோர் நல மன்றம் தலைவர் சண்முக சுதந்தரம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பர் அசோசிசன் தலைவர் கிருஷ்ணசாமி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சிந்து சுப்ரமணியம், செயலாளர்கள் ஆண்டிபாளையம் ரவி, ராதாகிருஷ்ணன், சங்க துணைத்தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


