திருப்பூர், ஜூலை26: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அமித் தலைமை வகித்தார். இதில், ‘மாநகராட்சி பகுதிகளில் 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் போது பிரிக்கப்படும் வாக்காளர்கள் அந்த வார்டுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மறு சீரமைப்பின்போது குடும்ப உறுப்பினர்கள் மாற்றப்படுவதை தவிர்த்து முறையாக மறுசீரமைக்க வேண்டும். கூடுதலாக்கப்படும் வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மகேஸ்வரி,உதவி ஆணையாளர்கள் கணேஷ்குமார்,ராஜசேகர்,தேர்தல் துணை வட்டாட்சியர் மேகநாதன்,மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக,அதிமுக,கம்யூனிஸ்ட்,பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement