காங்கயம், செப்.30 காங்கயம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் நஞ்சப்ப கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த மனோகரன் (58), இவர், நத்த கடையூர் லட்சுமிபுரம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில், 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.மனோகரன் அவரது மகன் இருவரும் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு மில்லின் மேற்கு புறத்திலிருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. தீ மள மளவென மில்லில் இருந்த தேங்காய் நாரில் பரவியது. இதனால். தேங்காய் நார் முழுவதும் தீயில் கருகியது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கயம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் கம்பெனியில் இருந்த தேங்காய் நார்கள், மஞ்சி மிஷின்கள் ஜேசிபி, டிராக்டரின் டைலர் எரிந்து சேதமானது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.