திருப்பூர், செப்.23: அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாலதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரஹமத் நிஷா, சிஐடியு மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் அன்பு, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிவராமன், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பாக்கியம் சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர்கள் சித்ரா, அனிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்கி ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.9 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கல்ன்து கொண்டனர்.